மலைப்பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்தால்தான் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காவல் துறையின் அனுமதியை மீறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாடு மேய்க்கும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார். கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி இந்த போராட்டத்தை நாம் தமிழர் கட்சியினர் நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையிலும் தடையை மீறி சீமான் போராட்டம் நடத்தினார். அப்போது சீமான் பேசியதாவது:-
இலங்கையில் எங்களை (தமிழர்கள்) குண்டு போட்டு கொன்றார்கள். அது இனப்படுகொலை. இங்கு குடிக்க வைத்து கொல்கிறார்கள். இதுவும் இனப்படுகொலைதான். இந்த நாட்டை உலகின் தலை சிறந்த நாடாக பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் ஆக சிறந்த நாடாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள் எல்லாம் கோடி கனவுகள் கொண்டோம். அதன நிறைவேற்ற கூடி வாருங்கள், ஓடி வாருங்கள் என் மக்களே, அவர்களுக்கு தெரியாது. ஆடு, மாடு என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, ஆடு மாடுகள் மேய்ப்பது தொழில்முறை அல்ல, எங்களது வாழ்க்கை முறை, கலாச்சாரம், பண்பாடு ஆகும். மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள், கூரிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன. மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமை, ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி, மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனராம். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதனை கண்டித்துத்தான் சீமான் போராட்டம் நடத்தி வருகிறார்.
