விவசாயிகளை காத்திருக்க வைத்திருப்பது நியாயமல்ல: பெ.சண்முகம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் கையில் பதாகைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், விவசாயிகளை காத்திருக்க வைத்திருப்பது நியாயமல்ல. இழப்பீட்டுத் தொகையை வழங்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் தொடரும் என்று சிபிஎம் சண்முகம் தெரிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்ற நிலையில் உரிய இழப்பீடு வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. நீதிமன்றம் அறிவுறுத்தியும் 18 ஆண்டுகளுக்கு மேலாக உரிய இழப்பீடு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வரும் நிலையில், இழப்பீடு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒருங்கிணைப்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மிகக் குறைவான விலைக்கு தங்கள் விவசாய நிலத்தை கல்விக்காக மனமுந்து விவசாயிகள் கொடுத்திருந்தார்கள். அப்போது இருந்த தமிழக அரசு வழங்கிய இழப்பீடு குறைவாக இருந்ததால் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் 2022 நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. வட்டியுடன் சேர்த்து 60 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு வந்தவுடன் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன் மொழியை நேரில் சந்தித்து தெரிவித்தோம். முதல்வரையும் நேரில் சந்தித்து தெரிவித்தோம். மூன்று ஆண்டுகள் ஆன பின்னும் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 45 ஆண்டுகளாக இழப்பீட்டுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளை இப்படி காக்க வைப்பது நியாயமா?.

அரசு கொடுக்கவில்லை எனில் அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது என்றால், பயன்படுத்திய நிலத்தை தவிர மிச்சம் இருக்கின்ற நிலத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகள் சங்கத்திடம் ஒப்படையுங்கள். பணமே கொடுக்க வேண்டாம். 928 ஏக்கரில் 300 முதல் 400 ஏக்கர் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 600 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் மார்க்கெட் விலையில் அதை பயன்படுத்திக் கொள்வோம்.

பணத்தை கொடுங்கள் அல்லது நிலத்தை கொடுங்கள் என்று கேட்கிறோம். விவசாயிகளை காத்திருக்க வைத்திருப்பது நியாயமல்ல. இழப்பீட்டுத் தொகையை வழங்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் தொடரும். ஏற்கனவே முதல்வரின் இது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் சந்திப்போம். முடிவு தெரிந்தவுடன் தான் இங்கிருந்து கிளம்புவோம். இவ்வாறு சண்முகம் கூறினார்.