நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநாடு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைய்டுத்து மாநாடு நடக்கும் தேதி மாற்றப்படலாம் எனவும், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் புதுவரவான, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இந்த மாதம் மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்திருக்கிறார். மதுரையில் மாநாடு என விஜய் அறிவித்த போது பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. காரணம் விஜயின் சினிமா வழிகாட்டியான விஜயகாந்த் பிறந்தது மதுரையில் தான். ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுரையில் இருந்துதான் விஜயகாந்த் தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் மாநில மாநாடு அரங்கேறியதும் மதுரையில் தான். இப்படி விஜயகாந்துக்கு நெருக்கமான மதுரையை விஜய் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் பயணத்தின் மீதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
மாநாட்டுக்காக விருதுநகர் – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் சுமார் 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. 300ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாடும், 200 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட இருக்கிறது. மாநாட்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை திரட்டி வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளுக்காக தனியாக 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. தன்னார்வலர்களாக பத்தாயிரம் பேரும், 500 பேர் மருத்துவ பணியிலும் ஈடுபட இருக்கின்றனர் என்கின்றனர் மதுரை மாவட்ட நிர்வாகிகள்.
மதுரையை பொறுத்த வரை அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மையம் என பல கட்சிகளில் முக்கிய தேர்வாக இருக்கிறது. ஏன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட திமுக செயற்குழுவை அங்கு தான் நடத்தியது. அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் விஜய்யின் திருமண நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக மாநாட்டுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் போலீஸ் தரப்பில் மாநாடு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மாநாடு 25ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில் முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதால் மாநாட்டு தேதியை மாற்றி அமைக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மாநாட்டு தேதி தொடர்பாக மூன்று முறை காவல்துறை தமிழக வெற்றி கழகம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மாநாட்டு தேதி மாற்றப்படலாம் எனவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநாடு நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து மாநாட்டுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “தவெகவின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடத்துவதாக தலைவர் விஜய் அறிவித்தார். ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படும். எனவே தேதியை மாற்றி வைக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். எனவே ஆகஸ்ட் 25ம் தேதிக்கு முன்னரே இம்மாதம் 18 முதல் 22ம் தேதி மாநாடு நடத்திக் கொள்ளும்படி கூறினர். தலைவர் விஜயின் ஆலோசனையின் படி ஒரு தேதியை குறிப்பிட்டு எஸ்பி இடம் கொடுத்துள்ளோம். அவரும் அந்த தேதியில் நடத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். தலைவர் விஜய் நாளை (இன்று) தேதியை அறிவிப்பார். மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் நிர்வாகிகள் இரவு, பகல் பாராமல் தீவிரமாக பந்தல், மேடை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அனுமதி கிடைத்தவுடன் திட்டமிட்டபடி மாநாடு வெகு விமர்சையாக நடக்கும்” என்றார்.
இந்நிலையில் மாநாடு தேதியை விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
