எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்ததற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, எம்ஜிஆர் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத்தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிரூபித்தவர். 1977-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து 3 முறை ஆட்சியை அமைத்து முதலமைச்சராகவே மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குச் சென்றவர்.
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் எம்ஜிஆர். அவரின் அதிமுக அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்தக் கொள்கை தான், மொத்தமுள்ள 58 ஆண்டு கால திராவிட ஆட்சியில், 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சி அமைய வழிவகுத்தது. இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்திய பெருமைக்குரியவர் எம்ஜிஆர். 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா. அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல். வருகின்ற தேர்தலில், கூடுதல் தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ, திமுகவையோ அல்லது திமுக தலைவரையோ திருமாவளவன் புகழ்ந்து பேசுவதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
அதே சமயத்தில், மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல். எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்த விமர்சனத்தை திருமாவளவன் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
