தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வேல்முருகன்!

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும், தூய்மை பணியாளர்கள் கடந்த 01.08.2025 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியால் சட்டவிரோதமாக வேலை பறிக்கப்பட்ட நிலையில், ரிப்பன் மாளிகை அருகே தங்களது பணி நிரந்தர கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது, சென்னையின் பத்து மண்டலங்களில் குப்பை அகற்றும் ஒப்பந்தத்தை சுமீத்-உர்பாசர், ராம்கி போன்ற தனியார் நிறுவங்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் கொடுத்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த தனியார்மய நடவடிக்கைக்கு பல எதிர்ப்புகள் எழுந்தாலும், சென்னையின் 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களையும் தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயற்சிக்கிறது. இதன் காரணமாகவே, 5 மற்றும் 6வது மண்டலங்களில் பணிபுரிந்த 1953 துப்புரவுப் பணியாளர்களை தனியார் நிறுவனத்தின் கீழ் பணி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் கூறியிருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று திடீரென தொழிலாளர்களிடம் “வேலை இல்லை, நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் அல்லது ராம்கி என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்” என்று மாநகராட்சி நிர்வாகம் கூறியிருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது. மேலும் தமிழ்நாடு தொழிற்தீர்ப்பாயத்திலும் பணிநிரந்தரம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சட்ட விரோதமான முறையில் தொழிலாளர்களை தனியார் நிறுவனத்திற்கு தள்ளியிருப்பது கடும் கண்டத்துக்குரியது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் இந்த தூய்மை பணியாளர்களை, தனியார் நிறுவனத்திற்கு செல்லுமாறு கட்டாயப்படுத்துவது சர்வாதிகாரத்தின் உச்சமாகும்.

தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள, இரவு பகல் பாராமல், 8வது நாளாக, சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் உள்ள தொழிலாளர்களோடு பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் வேதனையுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை காவல்துறையினர் மிரட்டுவதும், நெருக்கடி கொடுப்பதும் வன்மையாக கண்டிக்கதக்கது.

எனவே, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தனியார்மய நடவடிக்கையை கைவிடவும், தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.