இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்றும், அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கியூபா ஒருமைப்பாட்டு தேசியக் குழு மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
கியூபாவில் புரட்சியை நடத்தி, ஆட்சியை நடத்திய பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 2006 இல் கியூபா நாட்டின் பெருமையை போற்றக்கூடிய விழா சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட கலைஞர் அவர்கள், பிடல் காஸ்ட்ரோவின் கவிதையை சுட்டிக் காட்டினார். உயிரோடிருக்கும் உலகத் தலைவர்களின் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரை கூறுங்கள் என்றார். உயிரோடு இருப்பவர் மட்டுமல்ல என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு. அவர்தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.
தோழர்கள் சுட்டிக் காட்டும் விஷயங்களை எதில் உடன்பட வேண்டுமோ அந்த விஷயங்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறேன். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கம்யூனிஸ்ட் தோழர்கள் சுட்டிக் காட்டாமல் இருந்ததும் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவதை நான் புறக்கணித்ததும் இல்லை. எங்களில் பாதி கம்யூனிஸ்ட். என்னுடைய பெயரே ஸ்டாலின். நட்பு சுட்டல் எது, உள்நோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறு எது என எங்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியும். கொள்கைகளின் தெரிவும், நட்பின் புரிதலும் கொண்டவர்கள் நாங்கள் என்பதற்கு இந்த மேடைதான் அடையாளம்.
திமுகவுக்கும், கம்யூனிஸ்டுக்கும் உள்ள நட்பு தேர்தலுக்கானது அல்ல. கம்யூனிஸ்டுகள் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக அவர் கூறுகிறார். நாட்டில் யார் யார் எதைப் பேச வெண்டும் என்பதே இல்லை. அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? இங்கே யாருக்கும் யாரும் அடிமையில்லை. எங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இருப்பது கொள்கை, கோட்பாடு, லட்சிய நட்பு. இதுதான் பலருக்கும் கண்ணை உருத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
