திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன்!

அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், இன்று (புதன்கிழமை) காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் இணைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், டாக்டர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர், 1999 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி அணிக்கு தாவினார்.

பின்னர், 2022-ல் மைத்ரேயன், ஓபிஎஸ் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2023 ஜூன் மாதம் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் மீண்டும் 2024-ல் அவர் அதிமுகவில் இணைந்தார். பாஜக, அதிமுக என ஸ்டன்டிங் அடித்த மைத்ரேயன் இன்று காலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் திமுகவில் இணைந்ததாக அவர் கூறினார். அவருக்கு தற்போது கழக இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அன்வர் ராஜாவை தொடர்ந்து புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். “அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்தில் திமுகவில் இணைந்துள்ளேன்” என்று அவர் கூறினார்.

இப்போது, அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். “அதிமுக தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்கிறது.” என்று பாஜகவின் ஆதிக்கத்தை முன்வைத்து வெளியேறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் பேசியதாவது:-

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. கல்வி, சமூதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக இருப்பது மத்திய அரசு அறிக்கையில் தெளிவாக இருக்கிறது.

கருணாநிதியின் மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார். இதனால், ஸ்டாலினின் சிப்பாயாக திமுகவில் இணைந்துள்ளேன். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இந்தாண்டு மட்டுமல்ல, அடுத்தாண்டும் ஸ்டாலின்தான் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றுவார். வருகின்ற தேர்தல் 2 ஆம் இடத்துக்கானது.

அதிமுக போக்கு சரியாக இல்லை. பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணி ஆட்சி, குறைந்தபட்ச செயல்திட்டம் என்று அமித் ஷா கூறியுள்ளார். அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒருசிலர் திட்டமிட்டு கட்சியை கைப்பிடியில் வைத்திருக்கிறார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ளாததால் அதிமுகவில் இருந்து விலகியுள்ளேன்.

திராவிட கட்சிகளை பொறுத்தவரை கூட்டணியை முடிவு செய்வது அவர்களாகதான் இருப்பார்கள். ஆனால், அதிமுக கூட்டணியை முடிவு செய்யும் சுவிட்ச் தில்லியில் இருக்கிறது. தில்லிக்கு அதிமுக தலைமை கட்டுப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் பங்கு குறித்து மக்கள் யோசிப்பார்கள். திமுக ஆட்சி தொடர்வதற்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.