மதுரை மாநகராட்சியில் ரூ. 150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொன்வசந்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு நடைபெற்றுள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 5 மண்டலங்களைத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு விவகாரத்தை மதுரை டி.ஐ.ஜி. அபினவ் குமார் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தை சென்னையில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக போலீஸார் பொன் வசந்தை மதுரை அழைத்து சென்றனர். அதேபோல, தூத்துக்குடி உதவி ஆணையர் சுரேஷ்குமாரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் இவர் மதுரையில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, சுரேஷ்குமாரையும் போலீசார் மதுரைக்கு விசாரணைக்காக அழைத்து வருகின்றனர்.
