நாடு முழுக்க இன்று உற்சாகத்தோடு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாகப் பிரதமர் மோடி பேசினார்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தாண்டு ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைகிறது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளை இந்தியப் பாதுகாப்புப் படை அழித்தது. அதைக் கொண்டாடும் வகையில் இந்தச் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைகிறது.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். 140 கோடி மக்களின் கொண்டாட்டம் தான் இந்தச் சுதந்திர தினம் என்ற பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார். மேலும், கோடிக் கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம் பொங்குகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
