மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தாய் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழர் நல்ல பண்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநில ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் குடியரசு துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். ஆந்திர அரசு வழக்கறிஞர், ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி, கௌஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர், தற்போது இந்தியா கூட்டணியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதைய சூழலில் வெற்றி வாய்ப்பு சிபி ராதாகிருஷ்ணனுக்கு இருக்கிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 788 எம்பிகள் இருக்கும் நிலையில், ஆறு எம்பி பதவிகள் காலியாக இருக்கின்றன. 50 சதவீத வாக்குகளை அல்லது அதற்கு மேல் பெரும் வேட்பாளர் வெற்றி பெறும் சூழலில், 392 எம்பிக்களை ஆதரவை பெறுபவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 422 எம்பிக்கள் இருக்கும் நிலையில் சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியிலும். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “சிபி ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எனக்கு நல்ல நண்பர். 1998 ஆம் ஆண்டு எம்பி தேர்தலை மூன்று நாட்கள் கோவை நாடாளுமன்ற தொகுதியில் சிபி ராதாகிருஷ்ணனுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறேன். நல்ல வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். நாகாலாந்து ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த அவர் அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியரசு துணைத் தலைவர் வீரமும் விருந்தோம்பலும் நிறைந்த கொங்கு மண்டலத்தின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க இருப்பதற்கு எங்கள் மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசு துணைத் தலைவராக இருந்து குடியரசுத் தலைவராக கூட அவர் பொறுப்பு ஏற்கலாம். தாய் தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழர் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்பதற்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
