ஆன்லைன் கேமிங் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது!

புதிய ஆன்லைன் கேமிங் மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே இந்த மாசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பணம் வைத்து விளையாடும் அனைத்து கேமிங் பரிவர்த்தனைகளும் மத்திய அரசு தடை விதிக்க முடியும்.

நமது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருந்தாலும் ஆன்லைன் கேமிங்க்கு தெளிவான சட்டங்கள் இல்லை. இதனால் மோசடி, ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாவது என பல சிக்கல் இருக்கிறது. இதை முறைப்படுத்தப் புதிய ஆன்லைன் கேமிங் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம்’ என்று பெயரில் இந்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. இந்த மசோதாவின் கீழ் பணம் வைத்து விளையாடும் அனைத்து கேமிங் பரிவர்த்தனைகளும் தடை செய்ய முடியும். அதாவது ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பிராசஸ் செய்ய அனுமதிக்கப்படாது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட கேம்களுக்கு பண பரிவர்த்தனை செய்ய முடியாது.

இதற்கிடையே இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர், முதல்வர் கைதானால் பதவிநீக்கம் என்று மத்திய அரசு கொண்டு வந்த இன்னொரு மசோதாவுக்கு எதிராக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியின் கடும் அமளியில் ஈடுபட்டிருந்தனர். அந்த அமளிக்கு நடுவில் தான் இந்த மசோதா தாக்கலானது. இருப்பினும், கடும் அமளிக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது ஆன்லைன் கேமிங் துறையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.