சில்லித்தனமான வேலையை திமுக செய்யாது: அமைச்சர் மூர்த்தி!

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு திமுக எந்த இடையூறும் செய்யவில்லை, அப்படி ஒரு சில்லித்தனமான வேலைகளை திமுக எந்தக் காலத்திலும் செய்யாது என அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நடைபெற்ற இந்த மாநாடு அரசியல் ரீதியாகக் கவனம் பெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்தார்.

இந்த மாநாட்டில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுக மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். அண்ணா பாதையிலிருந்து திமுக விலகிவிட்டதாகச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகச் சாடினார். மேலும், தவெகவின் மதுரை மாநாட்டிற்குப் பெரிய தடைகளை அமைச்சர் மூர்த்தி செய்ததாகவும் தவெக கூட்டத்தைத் தடுக்க பார்த்ததாகவும் ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “அமைச்சர் மூர்த்தி, இந்த மதுரை மாநாட்டிற்கு எத்தனை தடைகள் உருவாக்கினார் தெரியுமா? மூர்த்தி என்ன சமூக நீதி காவலரா? ஒட்டுமொத்த ஊழலையும் ஒரு குடும்பத்திற்கு கொடுக்கும் அரசியல்வாதி தான் அவர். அத்தனை தடைகளையும் உடைத்து இங்கு நின்று கொண்டிருக்கிறோம். இந்தத் தடைகளை மீறி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தொண்டர்களின் ஆதரவே காரணம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, ஆதவ் அர்ஜூனாவின் கருத்துகளுக்கு பதிலளித்தார். அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

தவெக மாநாட்டிற்கு தாங்கள் ஒரு துளி கூட இடையூறு செய்யவில்லை. எந்த ஒரு திமுக தொண்டனும் அதுபோன்ற சில்லித்தனமான வேலைகளில் ஈடுபடுவது இல்லை. ஆதவ் அர்ஜுன் வேண்டுமென்றே இது போன்ற அவதூறுகளை எங்கள் மீது பரப்பி உள்ளார். நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்தும் எங்களுடைய பகுதியில் இருந்தும் எந்த ஒரு இடையூறும் செய்யவில்லை. எதிரிக்கு கூட நாங்களோ அல்லது எங்கள் முதலமைச்சரோ அந்த மாதிரி வேலைகளை நாங்கள் எந்த காலத்திலும் பார்ப்பதில்லை. அவர் செய்திருக்கிறார் என்றால் அதைவிட ஒரு பங்கு மேலாகத்தான் நாங்கள் செய்ய நினைப்போம். சேர் கொடுக்கக்கூடாது போன்றவற்றை திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தொண்டன் கூட அதனை செய்ய மாட்டான். இவ்வாறு அவர் கூறினார்.