விஜய்யை பூமர் என அழைத்தால் வருத்தப்பட மாட்டாரா..?: அண்ணாமலை!

“51 வயதான விஜய்யை பூமர் என அழைத்தால் வருத்தப்பட மாட்டாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். ஸ்டாலின் அங்கிள் என விஜய் பேசியதற்கு கண்டனம் எழுந்த நிலையில் அண்ணாமலை விஜய்யை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விஜய் நடத்திய இந்த மாநாடு அரசியல் ரீதியாகக் கவனம் பெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், மாநாட்டில் விஜய்யின் பேச்சு குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதில் அளித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தலைவர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். கட்சியில் புதியவர்கள் இணைந்து கொண்டுள்ளனர். 2026-ல் நிச்சயம் மாற்றம் வரும். விஜய் தன் மீது நம்பிக்கை வைத்து பேசினால் தான் அவரை தேடி மற்ற கட்சித் தலைவர்கள் வருவார்கள். விஜய் மற்ற கட்சியின் பலம், பலவீனத்தை கூறினாரே தவிர அவருடைய பலத்தை பற்றி தெரிவிக்கவில்லை. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கூறும் தமிழக வெற்றிக் கழகம் ஆக்கபூர்வமான என்ன கருத்தை முன் வைத்துள்ளது.

2014, 2019, 2024 என பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வெற்றி பெற முடியாத மாநிலங்களில் கூட பாஜக வெற்றியை பதிவு செய்து வருகிறது. பொதுமக்கள் பாஜகவை சக்தி வாய்ந்த கட்சியாக பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் 18 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். விஜய்யும், நாங்களும் சித்தாந்தத்தில் நேர் எதிராக உள்ளோம். விஜய் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தன்னுடைய பலத்தை பற்றி பேசவில்லை. விஜய் தனது ரசிகர்களின் பட்டாளத்தை வாக்குகளால் மாற்ற வேண்டும் என்றால் பலமான சித்தாந்தம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் படங்களில் மீனவராக நடித்துள்ளார். அப்போதெல்லாம் கட்சத் தீவு விவகாரம் குறித்து பேசவில்லை. தற்போது பிரதமர் நரேந்திர மோடி கட்சியை விவகாரம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசு மீட்டது, நடுக்கடலில் அவர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது உள்ளிட்டவை குறித்து விஜய்க்கு தெரியாது.

ஆரோக்கியமான அரசியல் செய்வேன் எனக் கூறினார் விஜய். ஒரு வருடம் கழித்து விஜய்யின் பேச்சு எப்படி இருந்தது? ஸ்டாலின் அங்கிள் என்கிறார். முதலமைச்சர் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் மேடையில் பேசும்போது முதலமைச்சரை பார்த்து மாமா எனக் கூப்பிடுவதா? யாராவது திமுக அமைச்சர், விஜய்யை பார்த்து பூமர் என்றால் எப்படி இருக்கும்? 51 வயசுல நீங்க பூமர் மாதிரி பேசுறீங்க எனக் கேட்டால் விஜய் மனது கஷ்டப்படுமா இல்லையா? பக்குவம் இல்லாமல் பேசுபவரை எப்படி முதலமைச்சராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? எல்லாருக்குமே தாய் மாமா என்றால் கடந்த 50 வருடங்களாக அந்த தாய் மாமா எங்கே சென்றார். எத்தனை பேருக்கு சீர் செய்தார்? எத்தனை சகோதரிகளுக்கு காசு வாங்காம டிக்கெட் கொடுத்தார் இந்த தாய்மாமா? தாய்மாமா என்ற வார்த்தையெல்லாம் ரொம்ப யோசித்துப் பயன்படுத்த வேண்டிய வார்த்தை. இவ்வாறு அவர் கூறினார்.