நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
ஜனவரி 1 அன்று இந்தியாவில் 22,775 கோவிட்-19 தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பின் தினசரி வழக்குகளின் எண்ணிக்கை தற்பொழுதுதான் 20,000 ஐத் தாண்டியுள்ளது.
மொத்தத்தில் நாட்டில் ஓமிக்ரான் (Omicron) மாறுபாட்டின் 1,431 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜனவரி 1 நிலவரப்படி மகாராஷ்டிரா 460 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது, டெல்லி 351, தமிழ்நாடு 121 மற்றும் குஜராத் 136 வழக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் ஜனவரி 1 ஆம் தேதி 2,716 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இப்போது உள்ள இந்த நிலை நம் முன்னே கோவிட் பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
கரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பரிசோதித்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்துவது முக்கியமானது.
ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வர 5 முதல் 8 மணி நேரம் ஆகும் என்பதால் நோய் தொற்றை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் ஆன்டிஜென் சோதனைகளை (ஆர்.ஒ.டி.) அதிகரிக்க வேண்டும்.