உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 11 முதல் அமலுக்கு வருகிறது.
விமானங்களில் பயணிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும், 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் தனிமை காலம் முடிந்ததும் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளது. மற்றும் பயணிகள் COVID-19 ஆர்டி-பிசிஆர் (RT-PCR) அறிக்கையைப் பதிவேற்ற வேண்டும். பயணத்தை மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
மத்திய அரசு மேலும் 8 நாடுகளை ‘ஆபத்திலுள்ள’ நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங், இஸ்ரேல், காங்கோ, எத்தியோப்பியா, கஜகஸ்தான், கென்யா, நைஜீரியா, துனிசியா மற்றும் ஜாம்பியா என நாடுகளின் பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆபத்து இல்லாத நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு, 2% பயணிகள் சோதனைக்காக தோராயமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.