பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள், பாதுகாப்பு விதிமீறல் காரணமாக ரத்தாகின. இது தொடர்பாக முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை நிலவியதால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக சென்ற பிரதமரின் வாகனம் மறிக்கப்பட்டது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து.
ஹூசைனிவாலா பகுதியில் போராட்டக்காரர்களால் சாலை மறிக்கப்பட்டிருந்ததால் 15-20 நிமிடங்கள் வரை பிரதமரின் கான்வாய் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
பிரதமரின் பயணத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அதன்படி அம்மாநில அரசு விதிமுறைகளின்படி அவசர காலத்திற்கான திட்டத்தைச் செயல்படுத்த உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சு கூறியது.
இந்த விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்தையும் எட்டியுள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில மூத்த வழக்கறிஞரான மணிந்தர் சிங், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “பஞ்சாப் அரசால் நிகழ்ந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து முழுமையான விசாரணை தேவை. இதுபோல் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறியது “நமது பிரதமரை நாங்கள் மதிக்கிறோம். பிரதமரின் பாதுகாப்பில் எந்தவித விதிமீறலும் இல்லை. முறையாக பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. எனது செயலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் நான் பிரதமரை வரவேற்க செல்ல இயலவில்லை. பா.ஜ.வினர் தான் இந்த விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்” என்றார்.
பஞ்சாப் மாநிலம் விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.