ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பஸ் நிலைய பகுதியில் ஷவர்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சிக்கன் ஷவர்மா வாங்கி சென்றனர். பலர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். இதில் கரிவல்லூரை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் தேவநந்தா (வயது 16) என்ற சிறுமியும் ஷவர்மா வாங்கி சாப்பிட்டார். இதனை சாப்பிட்ட சில மணி நேரத்தில் தேவநந்தாவுக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டது. உடனே அவரை பெற்றோர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவநந்தா சாப்பிட்ட உணவு காரணமாகவே அவருக்கு வாந்தியும், வயிற்று போக்கும் ஏற்பட்டிருப்பதாக கூறினர். இதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலையில் சிகிச்சை பலன் இன்றி சிறுமி தேவநந்தா பரிதாபமாக இறந்தார்.
தேவநந்தா பலியான சிறிது நேரத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினர். நேற்றிரவு வரை 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவருமே தேவநந்தா,ஷவர்மா சாப்பிட்ட அதே ஓட்டலில் உணவு உண்டவர்கள் ஆவர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர். மேலும் அங்கிருந்த உணவினை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஓட்டலுக்கும் சீல் வைத்தனர். இதற்கிடையே போலீசாரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தேவநந்தா இறந்த விவகாரம் தொடர்பாக ஓட்டலின் மானேஜர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
செருவத்தூர் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார். மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மந்திரி கோவிந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.