சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திராவிட கழக தலைவராக இருப்பவர் கி வீரமணி. இவர் மத்திய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் நீட் விலக்கு பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் அவர் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். இதுஒருபுறம் இருக்க இந்தி மொழிக்கு எதிராகவும் அவர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று இந்தி அழிப்புப் போராட்டம் நடத்தினர். இதற்காக கி ரமணி தலைமையில் திராவிட கழகத்தினர் பெரியார் திடலில் இருந்து புறப்பட்டு, ஈவெரா. நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர். அங்கு தடையை மீறி ரயில் நிலையத்துக்குள் சென்று இந்தியை அழிக்க முயன்றனர். போலீசார் வீரமணி உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் தொடங்கி வைத்தார். அப்போது கி வீரமணி தொண்டர்கள் மத்தியில் பேசியபோது கூறியதாவது:
இந்தி எழுத்தை அழிப்பதன் மூலம் கலாச்சார, பண்பாட்டு திணிப்பை நாம் எதிர்க்கிறோம். 1938ம் ஆண்டு பெரியார் காலத்தில் தொடங்கிய இந்தக் கலாச்சார திணிப்புக்கு எதிரான போராட்டம் இன்றுவரை தேவைப்படுகிறது. இந்த மண் காவி மண் அல்ல. இது பெரியார் மண். இதனால் இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழகம் ஏற்காது. இதற்கு அடையாளமாக தான் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்,மக்கள் தங்கள் மொழி, கலாச்சாரம், பண்பாடு, உரிமையைக் காப்பாற்றுவது அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற அளவுக்கு ஆணவம் வளர்ந்துவிட்டது. பெரியார் தொடங்கிய போராட்டம் ஒருபோதும் தோற்றது இல்லை. இது ஒரு தொடர் போராட்டம். வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.