இலங்கையில் மகிந்தா ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் புத்த மத துறவிகளும் களமிறங்கி உள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வெறுப்படைந்த மக்கள், ராஜபக்சே குடும்பம் முழுமையாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகக்கோரி கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே தொடர்ந்து பதவியை விடாமல் பிடித்துள்ளனர். குறிப்பாக, மகிந்தரா ராஜபக்சே அரசை கலைத்து விட்டு, அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டுமென பலரும் வலியுறுத்துகின்றனர். இடைக்கால அரசுக்கும் தானே பிரதமராக பதவி வகிப்பேன் என்பதில் மகிந்தா ராஜபக்சே பிடிவாதமாக உள்ளார். இதனால் எந்த எதிர்க்கட்சியும் இடைக்கால அரசில் பங்கேற்க வரவில்லை.
புத்த மதத்தை தழுவிய நாடான இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய புத்த மத துறவிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த விஷயத்தில் புத்த மத துறவிகளும் இடைக்கால அரசு அமைக்க பரிந்துரைத்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 4ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் கடிதம் அனுப்பினர். ஆனால், இந்த கடிதத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய புத்த மத துறவிகள், பிரதமர் மகிந்தா ராஜபக்சேக்கு எதிராக களமிறங்கி உள்ளனர். மகிந்தா ராஜபக்சே பதவி விலகவும், இடைக்கால அரசு அமைக்கவும் கோரி 1000க்கும் மேற்பட்ட புத்த மத துறவிகள் தலைநகர் கொழும்பில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர். இது ஆளும் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதில் பேசிய புத்த துறவிகள், ‘மகிந்த ராஜபக்சே பதவி விலகவில்லை என்றால், புத்த துறவி அமைப்புகள் சார்பாக அரசுக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்படும்,’ என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.
பிரதமர் மகிந்தா ராஜபக்சேக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே, 225 எம்பிக்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டுமாறும், பெரும்பான்மை இருக்கும் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாகவும் அதிபர் கோத்தபய ராஜபக்சே சவால் விட்டுள்ளார். இதை ஏற்றுள்ள இலங்கையின் எதிர்க்கட்சியான எஸ்ஜேபி கட்சி தலைவர் லட்சுமண் கிரில்லா, ‘அடுத்த வாரம் நாங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம். எப்படி என்று அந்த ரகசியத்தை இப்போது கூற முடியாது,’ என்று நேற்று தெரிவித்தார்.