காஞ்சிபுரத்தில் கட்டப்படும் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, திமுக சிறப்பான ஆட்சியை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 118 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சைக்காக அதிநவீன வசதிகளுடன் மேன்மைமிகு சிகிச்சை மையம் 500 படுக்கை வசதிகளுடன் இரண்டு அடுக்கு மாடி வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதனிடையே சட்டசபை கூட்டத்தொடரில் இதற்குக் கூடுதலாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக 250 படுக்கைகளுடன் மேலும் இரண்டு அடுக்கு மாடி மாடிகள் என மொத்தம் 4 அடுக்கு மாடிகளுடன்,750 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாகக் கட்டப்பட உள்ளது.
இந்த மருத்துவமனையின் கட்டிட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இதனிடையே மருத்துவமனை கட்டுமான பணிகளைத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழ்நாட்டில் இந்த ஐந்து ஆண்டுகளில் கூடுமானவரை ஏறத்தாழ தரைப் பாலங்கள் இல்லாத வகையில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவினர் ரூபாய் ஆறரை லட்சம் கோடி கடனை விட்டுச்சென்றுள்ள நிலையிலும், ஆண்டிற்கு 48 லட்சம் கோடி வட்டி கட்டவேண்டிய சூழ்நிலை உள்ளது. மாநிலத்தின் பொருளாதார நிலை மோசமான, கடினமான வகையில் உள்ளது. கையில் காசு இல்லாத நிலையில் இருக்கிற பொழுது கூட, ஒரு சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர், அதற்கு அவருடைய அட்மினிஸ்ட்ரேட்டிவ் பவர் தான் காரணம்.
ஓராண்டு நிறைவு செய்வதற்கு முன்னாலேயே 50% சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார், இன்னும் இருப்பது 50 சதவிகிதம் மட்டும்தான்,அதனால் 4 ஆண்டுகளில் ஏறத்தாழ கூடுமானவரையில் இந்த நிதி நிலைக்கு ஏற்ப மேம்பாலங்கள் கட்டி முடித்து விடுவோம். போக்குவரத்து நெரிசல் காரணமாகச் சென்னைக்குச் செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. இதை அறிந்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த போக்குவரத்து சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் இருந்து தாம்பரம் வரையிலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி வரையிலும் மேல்மட்ட சாலை அமைக்க வேண்டும் எனத் தமிழக முதலமைச்சருடன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளோம். அதற்கான பணிகளை விரைவில் தொடங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.