பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலின்போது நாடு முழுவதும் மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என மும்பை பங்குச்சந்தை தலைவர் ஆஷிஸ் சவுகான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் ஐ.ஐ.எம். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது:
கடந்த 2020 ஆம் ஆண்டு ஐ.நா.வின் உலக உணவு திட்டத்துக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகளவில் 11.50 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய காரணத்திற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றது. ஐக்கிய நாடுகள் சபை 88 நாடுகளுக்கு உட்பட்ட 9.7 கோடி பேருக்கு இலவசமாக உணவு வழங்கியது. அதற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ, இந்தியாவில் உள்ள 80 கோடி மக்களுக்கு கொரோனா காலத்தில் இலவசமாக உணவு தானியங்களை வழங்கி இருக்கிறார். பிரதமர் மோடி வழங்கிய உதவியை ஒப்பிடுகையில் ஐ.நா. வழங்கிய உதவி எல்லாம் வெறும் 14 சதவீதம் மட்டும்தான். உலகளவில் வளர்ந்த நாடுகளை காட்டிலும் நமது இந்திய மக்களின் தனிநபர் வருமானம் என்பது 10 முதல் 30 சதவீதம் குறைவு. ஆனாலும் கொரோனா காலத்தில் நம் நாடு சிறப்பாக செயல்பட்டது. கடினமான காலத்தில் அரசு நிர்வாகம் சிறப்பாக இருந்ததை எண்ணி நாம் பெருமை அடைய வேண்டும். கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளில் மத்திய அரசால் உணவு தானியம் வாங்கியவர்கள் எண்ணிக்கை 80 கோடி.
பல நாடுகளின் மக்கள் தொகையை சேர்த்தால்தான் இந்த எண்ணிக்கையே வரும். 11.50 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய காரணத்திற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டத்துக்கு பரிசு வழங்கிய நோபல் கமிட்டி பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் விருது வழங்க ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? வேண்டும் எனில் நோபல் கமிட்டி இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்திய இலவச உணவு திட்டத்தை தற்போது கூட பார்வையிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.