தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக இல்லாமல் அவர்களை வாழ வைக்கும் அரசாகத் திமுக அரசு விளங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமைமிதத்துடன் கூறியுள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தி, மே தின வாழ்த்துரை ஆற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளி பெருமக்களுக்காக நடைபெறும் ஆட்சிதான்! திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்ற நேரத்தில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய ‘முரசொலி’ இதழில் ஒரு கவிதையை வடித்துத் தந்தார்கள்.
”ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்!
இனி ஏழைக்கு வாழ்வு வந்தது” – என்று பெருமையோடு எழுதிக்காட்டினார்கள்!
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும் சரி – அதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏழைகள் – தொழிலாளர் தோழர்கள் மனமகிழ்ச்சியோடு சிரிக்கும் ஆட்சியாகத்தான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல – தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாகவும் இன்றைக்கு திமுக அரசு இருந்து கொண்டிருக்கிறது.
ஏழைகளுக்காக, தொழிலாளர் தோழர்களுக்காக, பாட்டாளிப் பெருமக்களுக்காக, வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்காக, அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து தலைவர் கலைஞர் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் எவ்வளவோ திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு சிலவற்றை மாத்திரம் நான் இங்கு நினைவுப்படுத்த வேண்டியதை என் கடமை.
* குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தது தி.மு.க.!
* ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் அமைத்து தந்ததும் தி.மு.க.!
* நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் தங்கி வாழ்வதற்கு இல்லங்கள் அமைத்து தந்தது. அதேபோல் தொழுநோயாளிகளுக்கு இல்லம் அமைத்து தந்தது தி.மு.க.!
* தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்கியதும் தி.மு.க.!
* விவசாய தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க ஆணையம் அமைத்தது தி.மு.க.!
* நகர்ப்புறத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம் அமைத்ததும் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில்தான்!
* விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தம் ஆக்கித் தந்ததும் தி.மு.க.
* மனிதனை மனிதனே வைத்து இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, அதற்கு மாற்றாக சைக்கிள் ரிக்ஷாவை அறிமுகப்படுத்தியதும் தி.மு.க.!
* இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் தி.மு.க.!
* அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்ததும் தி.மு.க.!
* உழவர் சந்தைகள் உருவாக்கித் தந்ததும் தி.மு.க.!
* பெரியார் பெயரில் சமத்துவபுரங்கள் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்ததும் தி.மு.க.!
அந்தளவிற்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை – எளிய, தொழிலாள தோழர்களுக்கான ஆட்சியாக தமிழக ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர் கலைஞர்! கருணாநிதியின் பாதையில்தான் அவருடைய மகனான நான் இந்த ஆட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்று ஸ்டாலின் பேசினார்.