சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மாநில நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவுத் தூணை திறந்து வைத்தார். மாநிலத்தின் பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் முதல்வர் பேசும்போது, ‘தரமான சாலைகளை அமைப்பதே தமிழக அரசின் இலக்கு. நாட்டிலேயே தரமான மேம்பாலமாக சென்னை அண்ணா மேம்பாலம் திகழ்கிறது. இந்தியாவிலேயே நெடுஞ்சாலைத் துறைக்கு ஆராய்ச்சி நிறுவனம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை 1946 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. தமிழ்நாடு உட்கட்டமைப்பில் இந்தளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் நெடுஞ்சாலைத் துறைதான். 1954 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி, இந்தியாவிலேயே மாநில அளவிலான முதல் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இதுதான் இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆராய்ச்சி நிலையம். இந்த ஆராய்ச்சி நிலையத்தை உலகத் தரம் வாய்ந்ததாக விரைவில் மாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நெடுஞ்சாலைத் துறைக்காக தனி அமைச்சகம் 1998 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதை ஏற்படுத்தியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தான். எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையை மேன்மைப்படுத்தியவராக கலைஞர் திகழ்கிறார்’ என்று ல்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.