முத்தலாக் தடை சட்டத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் தனது கணவனுக்கு 3 மனைவிகள் இருக்க விரும்ப மாட்டார். யாரும் 3 முறை திருமணம் செய்து கொள்ளட்டும் என்று கூறவும் மாட்டார்கள். ஒரு முஸ்லிம் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணப்பது, அவருக்கு பிரச்னை அல்ல. ஆனால், முஸ்லிம் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும்தான் பிரச்னை. அவர்களுக்கு இந்த சமூகத்தில் கவுரவம் அளிக்கப்பட வேண்டும் என்றால், முத்தலாக் தடை சட்டத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.
நான் ஒரு இந்து. எனக்கு பொது சிவில் சட்டம் இருக்கிறது. எனது சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் கூட இந்த சட்டம் இருக்கிறது. எனது மகளுக்கு இந்த சட்டம் இருக்கிறது என்றால், முஸ்லிம் மகள்களுக்கும் இந்த பாதுகாப்பு கட்டாயம் வேண்டும். பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான திட்டத்துக்கு, அசாம் அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும். நாட்டில் ஒருவருக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு வேறு சட்டம் என்ற நடைமுறையில் இருந்து வெளியே வர வேண்டும். அதற்கு நாடு முழுவதும் பொதுச் சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.