2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும்: அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆன போதிலும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. ஒற்றுமையாக செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும் என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்ட மேடையில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

ஒற்றுமையாக செயல்பட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும். தற்போது அரசியல் மாறியுள்ளது, வியாபாரிகள், தொழிலாளர்கள் பாமக ஆட்சி வேண்டும் என கூறுகின்றனர். அனைத்து கிராமங்களில் பாமக கொடி பறக்க வேண்டும். மிகப்பெரிய பலமாக இளைஞர்கள் எந்த கட்சியிலும் இல்லாத அளவிற்கு பாமகவில் உள்ளனர். கட்சி தொடங்கியதிலிருந்து பாமக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 35 வயதிலேயே மத்திய அமைச்சராக இருந்து அனைத்து தலைவரையும் பார்த்துவிட்டேன். எனக்கு பதவி ஆசை இல்லை. தமிழகத்தில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் அதிகமாக உள்ளது.

பூரண மதுவிலக்கினை கொண்டு வருவோம் என அனைத்து கட்சியினரும் ஏற்று கொண்டுள்ளனர். பள்ளி மாணவிகள் மது அருந்துவதும், மாணவர்கள் ஆசிரியரை மிரட்டுவதுமான கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் தேக்க நிலை பல ஆண்டுகளாக உள்ளது.

தமிழ்நாட்டில் வன்னியர் தாழ்த்தப்பட்ட சமுதாயம் 40 விழுக்காடு உள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித விழுக்காடு என்பது மிக மிக குறைவு, சாதி வாரி புள்ளி விவரங்கள் இல்லை என்பதால் 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது, தமிழக முதலமைச்சரை சந்தித்து 10.5 சதவிகித இடஒதுக்கீடு பெற கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் போராட வாய்ப்பு இருக்காது. தமிழக அரசு பாமக கோரிக்கை நிறைவேற்றும் என நம்புகிறேன்.

தமிழக அரசும், ஆளுநர் இருவரும் அரசியல் சாசன பிரதிநிதிகளாகவும், ரயில் தண்டவாளம் போல் உள்ளதால் இருவரும் இணைந்து செயல்பட்டால் தான் தமிழகம் முன்னேற்றமடையும். இருவருக்குள் பிரச்சனை வரக்கூடாது, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். இருவரும் சுமுகமான உறவு வைத்து கொண்டால் தான் தமிழக மக்கள் பயன்பெறுவார்கள்.

தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, ஹெராயின், அபின் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடந்த பத்து ஆண்டுகளாக அதிகரித்து அனைத்து பள்ளிகள் முன்பு கிடைக்கிறது. நிகர் நிலை பல்கலைக்கழகங்களிலும் போதை பொருட்கள் சாதாரணமாக கிடைப்பது நிர்வாகத்து தெரிந்தும் அமைதியாக உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் காவல்துறைக்கு தெரியாமல் போதைபொருட்களை யாராலும் விற்க முடியாது. காவல்துறை நினைத்தால் எல்லாத்தையும் ஒழித்துவிடலாம், லாக் மரணங்களை தடுக்கும் விதமாக காவல் நிலையங்கள் உள்ளேயும் வெளியேவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட வேண்டும். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர்பேசினார்.