பிரதமர் மோடியின் ஆலோசகராக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவரது நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. பொறுப்பேற்கும் நாள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டு இமாச்சலப்பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான தருண் கபூர் பெட்ரோலியத்துறை செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்றார். இதற்கு முன்பு பல்வேறு பதவிகளை வகித்த தருண் கபூர், தற்போது பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படும் தருண் கபூருக்கு மத்திய அரசுத் துறை செயலாளருக்கு இணையான அந்தஸ்து மற்றும் சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல், ஹரி ரஞ்சன் ராவ் மற்றும் ஆதிஷ் சந்திரா ஆகியோர் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர். 1994ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான ஹரி ரஞ்சன் ராவ், தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார். 1994ஆம் ஆண்டு பீகாரில் இருந்து தேர்வான ஆதிஷ் சந்திரா, இந்தியஉணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.