சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வி.ஜி.கண்ணையன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயை ஒட்டி இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 259 வீடுகள் உள்ளது. பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீசை மக்கள் வாங்க மறுத்த நிலையில், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனுக்களை அனுப்பினர். மனுக்கள் தொடர்பாக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று வீடுகளை இடிக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது.
சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புடன் குடியிருப்புகளை அதிகாரிகள் இடித்து வருகின்றனர். 256 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் வேறு எங்கும் குடிபெயர்ந்து போக முடியாத கையறு நிலையில் உள்ளனர். வீட்டை விட்டுட்டு எங்க போவது? எங்க பிள்ளைகள் இங்குதான் படிக்கிறார்கள், நாங்கள் அமைதி வழியில்தான் போராடுகிறோம். முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனுக்களை அனுப்பியுள்ளோம். கொஞ்சம் கூட அவகாசம் கொடுக்காமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என அப்பகுதியினர் கூறினர்.
நேற்று காலை இளங்கோ நகரில் உள்ள வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது 65 வயது மதிக்கதக்க கண்ணையா என்ற முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவரைக் காப்பாற்றிய அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் தீக்குளித்த வி.ஜி.கண்ணையன் இன்று காலை உயிரிழந்துள்ளார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.