தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.
சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- அ.தி.மு.க. விரைவில் ஒன்றிணையும், ஆட்சிக்கு வரும் என்று கூறி இருந்தீர்கள்? ஆனால் இதுவரை அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் உங்களை சந்திக்கவில்லை. எந்த அடிப்படையில் அது போன்று தெரிவித்தீர்கள்?
பதில்:- அது தொண்டர்கள் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் வெற்றி பெறும். அந்த அடிப்படையில் தான் நான் கூறினேன்.
கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் கூட்ட போவதாக கூறி இருக்கிறார்களே?
பதில்:- எதை செய்தாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. ஏனென்றால் தொண்டர்கள் அவர்களுடன் இல்லை.
கேள்வி:- அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவருமே உங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்களே?
பதில்:- எல்லோரும் பேசவில்லை. ஒரு சிலர் பேசுகிறார்கள். அவர்கள் ஏதாவது பதவி கிடைக்கும் என்பதற்காக கூட பேசலாம் இல்லையா?
கேள்வி:- உங்களை அ.தி.மு.க.வில் இணைக்கவே முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்களே?
பதில்:- இதனை சொல்வதற்கு அவர்கள் யார்? அ.தி.மு.க.வில் யார் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பதை தலைவர் சொல்லி இருக்கிறார். அதன்படி பார்த்தால் தொண்டர்கள்தான் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்.
கேள்வி:- அ.தி.மு.க. சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்:- அ.தி.மு.க. எந்த விஷயத்திலும் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அதனால் தலைமைக்கு நீங்கள் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
கேள்வி:- தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்? நேற்று கூட பா.ஜனதா பிரமுகர் ஒருவர் போலீஸ் பாதுகாப்பு இருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளாரே?
பதில்:- தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. போலீஸ் துறையை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் அந்த துறை உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது.
கேள்வி:- அ.தி.மு.க.வை சட்ட ரீதியாக மீட்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறதா?
பதில்:- பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக எப்படி கூறுகிறீர்கள். இது சுப்ரீம் கோர்ட்டு முடிவா என்ன?
கேள்வி:- அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய போகிறீர்கள்?
பதில்:- அடுத்த கட்ட நடவடிக்கைகளை நான் விரைவில் மேற்கொள்ள உள்ளேன்.
கேள்வி:- அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தொடர்பில் உள்ளனரா?
பதில்:- இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். யார்-யார் என்பதை வெளியில் செல்ல முடியாது. இவ்வாறு சசிகலா கூறி உள்ளார்.