ஸ்ரீபெரும்பதூரில் உள்ள ஆப்பிள் iPhone மொபைல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ‘ஃபாக்ஸ்கான்’ ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க தலைமை முடிவு.
சமீபத்தில் அடிப்படை வசதிகள் இல்லையென கூறி பெரிய அளவில் ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பினை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது .
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் ஆப்பிள் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
பாக்ஸ்கான் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி, கடந்த 18-ம் தேதி இரவு சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தொழிலாளர்களின் தங்குமிடங்கள், உணவு விடுதிகளை ஆய்வு செய்ய தணிகைக் குழு ஒன்றை ஆப்பிள் நிறுவனம் அனுப்பி வைத்தது. அதனை தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்று கண்டறிந்துள்ளதாக, ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.