எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுகலை பொறியியல் படிப்புகளில் கலந்தாய்விற்கும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டுமென அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 3 ந் தேதி முதல் பிப்ரவரி 1 ந் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2021-22ம் கல்வியாண்டில் சேர்வதற்கான தேர்வு நடத்தப்பட்டது. மேலும் கேட் நுழைவுத்தேர்வு எழுதி தகுதிப்பெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக் கழகம் பெற்றது.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், சான்றிதழ்கள் தொலைந்து போனாலும், மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கும்,விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கும், எந்த தேதியில் மாணவர் பட்டம் பெற்றார் என்பதற்குச் சான்று அளிக்கும் சான்றிதழ்கள் ஆகிய சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது.