சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வியாழக்கிழமை 5 மணி நேரத்துக்கு மேலாக மிதமானது முதல் பலத்தமழை கொட்டித்தீா்த்தது. பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுரங்கப் பாதைகளும், சாலைகளும் மூடப்பட்டன. சாலைகளில் ஓடிய மழை நீரால் போக்குவரத்து முடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தனது சேவைகளை நள்ளிரவு வரை நீட்டித்ததால் நான்கு சுரங்கப்பாதைகளும் பல சாலைகளும் போக்குவரத்துக்காக மூடப்பட்டன.
கனமழையால் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலத்த காற்று மற்றும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை காரணமாக சென்னையில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற செயல்தலைவர் ஸ்டாலின், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளை உஷார்படுத்தினார்.
ரெட் அலர்ட்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை ரெட் அலா்ட் விடுக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் மிக பலத்தமழை முதல் அதி பலத்தமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
மழை அளவு விவரம்:
சென்னையில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை எம்ஆா்சி நகா் 200 மி.மீ., சென்னை நுங்கம்பாக்கத்தில் 159.5 மி.மீ., மீனம்பாக்கத்தில் 108.0 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 121.0 மி.மீ., ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் 152.0 மி.மீ., சத்தியபாமா பல்கலைக்கழகம் 58.5 மி.மீ., ஏசிஎஸ் மருத்துவகல்லூரி(காஞ்சிபுரம் மாவட்டம்) 108.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஐஎம்டி வானிலை முன்னறிவிப்பு:
தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூரில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என ஐஎம்டி கணித்துள்ளது.