புதுக்கோட்டை மாவட்டம், டிசம்பர் 30ம் தேதி நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக பாய்ந்த குண்டு வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி (வயது 11) தலையில் மற்றும் காலில் தோட்டா பாய்ந்தது. தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன் கடந்த 5 நாள்களாகத் தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை புகழேந்தி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் மரணம்; பசுமலை பட்டி துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும்
புதுக்கோட்டை, அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பசுமலை பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்படும் என இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆட்சியர் முடிவு செய்துள்ளார் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை, “எந்த வித முன்னெச்சரிக்கை, அறிவிப்புமின்றி தான் அன்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியை போலீஸார் மேற்கொண்டிருக்கின்றனர். வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பாவி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிலையத்தை உடனடியாக மூட வேண்டும். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம், அவர்களுக்கு வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
சிறுவனின் மறைவையடுத்து அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தற்காலிகமாக மூடப்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் கிராமவாசிகள் சாலை மறியல் செய்தனர்.