தமிழகத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, அம்மா உணவகத்தில் பணியாளர்களை குறைப்பது குறித்து அதிமுக – திமுகவினரிடையே காரசார விவாதம் நடந்தது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர். அம்மா இரு சக்கர வாகனம் வாங்கியவர்களுக்கு இன்னமும் மானியம் போய் சேரவில்லை. அதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்ய வேண்டும். அம்மா உணவகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. இது கண்டனத்துக்குரியது” என்றார்.
“அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு மூடியது. நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு?” என்றார் அமைச்சர் துரைமுருகன்.
அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிச்சாமி, “அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது, ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்” என்றார்.
இந்த பதிலைக் கேட்டவுடன் குறுக்கிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மூடியதால் தான் நீங்கள் ஆட்சியை இழந்தீர்கள்” என்று பதிலடி கூறினார்.