இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். உணவுகூட கிடைக்காமல் ஏராளமானோர் திண்டாடுகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உணவுப் பஞ்சத்தால் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே பல குடும்பங்கள் ராமேசுவரத்துக்கு வந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து இதுவரை 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாகையில் கோடியக்கரை அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், இந்திய எல்லைக்குள் விசைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. இதனை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கடலோர காவல் படையினர் கவனித்தனர். இதனை தொடர்ந்து, அந்த படகை நெருங்கிய கடலோர காவல் படை அவர்களிடம் விசாரித்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை படையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.