தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர்: வானதி

இந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர் என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை மாவட்ட பா.ஜ., சார்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தெற்கு தொகுதிக்குட்பட்ட ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் தேசிய கொடிகளை வழங்கினார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டு மக்கள், 75வது சுதந்திர தினத்தை திருவிழா போல் கொண்டாட வேண்டும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். தி.மு.க.,வினர் அரசு பள்ளி குழந்தைகள் இந்தி கற்றுக்கொள்வதை எதிர்க்கின்றனர். ஆனால், வியாபாரம் என வரும் போது, இந்தி திரைப்படங்களை வெளியிடுவது, இந்தி சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, அவர்களது தனிப்பட்ட குடும்ப லாபத்துக்காக சமரசம் செய்துகொள்கின்றனர். தமிழகத்தில் ஏழை, எளிய குழந்தைகளை இன்னொரு மொழி கற்க எதிர்க்கின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொருவரும் தாய் மொழியில் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார். அந்தக் கொள்கையை தான் தி.மு.க., எதிர்க்கிறது. நாங்கள் தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் என கூறி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.