லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, ‘புக்கர்’ பரிசை பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ கருதப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த நாவல் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியாகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 135 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 13 நாவல்கள் பரிந்துரை பட்டியலுக்கு தேர்வாகின. இதில், இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.
எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ ‘ரெட் சமாதி’ என்ற பெயரில் இந்தியில் எழுதிய இந்த நாவல், எழுத்தாளர் டெய்சி ராக்வெல் என்பவரால், ‘டாம்ப் ஆப் சாண்ட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் மூலம், புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய மொழி நாவல் என்ற பெருமையை இந்த நாவல் பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, ‘புக்கர்’ பரிசை பெற்றுக்கொண்டார். அதோடு 50 ஆயிரம் யூரோ(இந்திய மதிப்பில் 41.69 லட்சம் ரூபாய்) பரிசு தொகை அவருக்கு வழங்கப்பட்டது. இதை மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லுடன், கீதாஞ்சலி ஸ்ரீ பகிர்ந்து கொண்டார்.