நாம் நினைப்பதை விட குழந்தைகள் ரொம்பவே ‘ஷார்ப்’!

குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்பார்கள். அதிகமாக கொடுத்தாலும், குறைவாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை என்பது அம்மாக்கள் அடிக்கடி சொல்லும் வாசகம்.

இதில் உண்மை இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

15 மாத குழந்தைக்கு நல்லது எது, கெட்டது எது, தனக்கு (உதாரணமாக- பிஸ்கட்) குறைவாக கொடுத்து இருக்கிறார்களா? அதிகமாக கொடுத்து இருக்கிறார்களா? என்று ஒப்பிட்டு பார்த்து அறிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் உள்ளது என்கிறது இந்த ஆய்வு.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த பேராசிரியர் ஜெஸ்சிகா சோமர்வில்லி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதன்படி குழந்தைகளை ஒரு குழுவாக வைத்து அவர்களில் சிலருக்கு அதிகமாக தின்பண்டங்களும், சிலருக்கு குறைவாகவும் கொடுத்தனர். இதில் குறைவாக தின்பண்டம் பெற்ற குழந்தைகள் முரண்டு பிடித்தன. அதிகமாக தின்பண்டம் வைத்திருந்த குழந்தையின் கையில் இருந்து அதை பிடுங்க முயற்சி செய்தன. சில குழந்தைகள் இதை ஏற்க மறுத்து அழுது அடம்பிடித்தன. சில குழந்தைகள் தங்கள் கையில் கொடுத்ததை வீசி எறிந்து, அதிகமாக வைத்திருந்த குழந்தையிடம் இருந்து உணவுப்பண்டங்களை பிடுங்கி ரகளை செய்தன.

உணவுப்பண்டங்கள் மட்டுமல்ல, பொம்மைகள் விஷயத்தில் இந்த அடம்பிடித்தல் மிக அதிகமாக இருந்தது.

இந்த ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறும்போது, “நாம் நினைப்பதை விட குழந்தைகள் ரொம்பவே ‘ஷார்ப்’ ஆக உள்ளனர். எல்லோருக்கும் சரி சமமாகவே கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். மற்றவர்களை விட தங்களுக்கு குறைவாக கிடைக்கும் போது அதை ஏற்க மறுப்பதோடு, கூடுதலாக கிடைக்கும் வரை போராடவும் (அழுது ஆர்ப்பாட்டம் செய்யவும்) அவர்கள் தயாராக இருந்தனர்”, என்று தெரிவித்தனர்.