அர்ஜுனா விருதை என் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்: துளசிமதி!

“அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. விருதை என் அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என அர்ஜுனா விருதுக்கு தேர்வான நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவியும், பேட்மின்டன் வீராங்கனையுமான துளசிமதி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மின்டன் வீராங்கணை எம்.துளசிமதி. இவர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரியில் கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி) 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு இந்திய அரசின் விளையாட்டுத் துறை உரிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவி துளசிமதி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். சிறுவயது முதல் எந்த ஒரு அகாடமிக்கும் சென்று பயிற்சி பெற்றது கிடையாது. முழுக்க முழுக்க தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு மைதானத்தில் மட்டுமே பயிற்சி பெற்றேன். பேட்மின்டன் போன்ற விளையாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக விளையாட பயிற்சி அளித்து வெற்றி பெற வைத்ததவர் என் அப்பா. இந்த தருணத்தில் என அப்பாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பாரிஸில் ஒலிப்பிக்கில் பங்கேற்க அனைத்து விதத்தில் உதவிகரமாக இருந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு, மத்திய அரசுக்கும் நன்றி தெிரிவித்துக் கொள்கிறேன். உயரிய விருதான அர்ஜுனா விருது அறிவித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே அர்ஜுனா விருதுக்கு தேர்வான மாணவி துளசிமதிக்கு கல்லூரி நிர்வாகம், மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.