அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவான் மீது சீனா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
2-ம் உலகப்போருக்கு பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, நான்சி பெலோசி தைவான் சென்றால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது. ஆனால் சீனாவில் எதிர்ப்பயைும், மிரட்டலையும் புறந்தள்ளிவிட்டு நான்சி பெலோசி நேற்று முன்தினம் தைவான் சென்றார். கடும் பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகர் தைபேயில் தரையிறங்கியது. அங்கு அவருக்கு தைவான் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதை தொடர்ந்து அவர் தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. தைவானுடன் நாங்கள் நிற்கிறோம். தைவானுக்கு பாதகமாக எதுவும் நடக்க நாங்கள் விடமாட்டோம். தைவான் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இதிலிருந்து தைவான் பின்வாங்கக் கூடாது. தைவானிலும் உலகெங்கிலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு இரும்புக்கரம் நிறைந்ததாகவே உள்ளது” என கூறினார்.
இந்த நிலையில் நான்சி பெலோசியின் வருகையால் கடும் கோபத்தில் உள்ள சீனா, இந்த விவகாரத்தில் தைவானை தண்டிக்கும் விதமாக தைவான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. அதன்படி தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உணவு தயாரிப்பு நிறுவனங்கள் என்று கூறப்படுகின்றன. மேலும் தைவானின் தேயிலை இலைகள், உலர் பழங்கள், தேன், கொக்கோ பீன்ஸ், காய்கறிகள் மற்றும் மீன்வகைகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. அதே போல் சீனாவில் இருந்து தைவானுக்கு இயற்கை மணல் ஏற்றுமதியை நிறுத்துவதாகவும் சீனா அறிவித்துள்ளது.
தைவான் மீது சீனா கடுமையான அணுகுமுறையை கொண்டிருந்தாலும் சீனா தைவானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த தடைகளால் தைவான் பொருளாதார ரீதியில் கடுமைாயாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே நான்சி பெலோசியின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சீனாவுக்கான அமெரிக்கா தூதரை சீனா நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. மேலும் அமெரிக்கா தனது தவறுகளுக்கு விலையை கொடுக்கும் எனவும் சீனா எச்சரித்தது.
இந்நிலையில் தைவான் பாதுகாப்பு அமைச்சக இணையதளம் சைபர் தாக்குதல்களால் தற்காலிகமாக செயல்பட முடியாத வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. தைவான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அதன் இணையதளம் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக ஆப்லைனில் செயல்பட முடியாத வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவுடனான பதட்டம் அதிகரித்து வருவதால், இணைய பாதுகாப்பை மேம்படுத்த மற்ற அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், ஜனாதிபதி அலுவலகம் உட்பட பல அரசாங்க வலைத்தளங்கள் வெளிநாட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின. அதிலும் குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவில் இருந்து இந்த சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.