அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் – ஜவாஹிரி கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகள் அமெரிக்க மக்களை தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் பயங்கரவாதி அய்மான் அல் – ஜவாஹிரி. ஆப்கனில் பதுங்கியிருந்த அவர் சில தினங்களுக்கு முன் ஆளில்லா குட்டி விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்டார். அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., நடத்திய இந்த தாக்குதல் அல் – குவைதா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அய்மான் அல் – ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அல் – குவைதா அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தலாம். தற்கொலைப் படை தாக்குதல், குண்டு வீச்சு, ஆட்கடத்தல் உள்ளிட்ட தாக்குதல் நடக்கும் வாய்ப்பு உள்ளதால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அமெரிக்க துாதரகங்களில் பதிவு செய்து, மொபைல் போனில் பயங்கரவாத அச்சுறுத்தல், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். உள்நாட்டு செய்திகளை உன்னிப்பாக கவனித்து, அங்குள்ள அமெரிக்க துாதரகங்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அமெரிக்கர்கள், உள்நாட்டு போர் நடக்கும் நாடுகளுக்குச் செல்ல வேண்டாம். அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அய்மான் அல் – ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அல் – குவைதா அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், சென்னை அண்ணா சாலையில் உள்ள, அமெரிக்க துணை துாதரகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு எப்போதும், ‘வஜ்ரா’ வாகனம் ஒன்றும் நிறுத்தப்பட்டு இருக்கும். தற்போது மேலும் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. உதவி கமிஷனர் தலைமையில், 50 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் பாதுகாப்பு சில தினங்களுக்கு நீடிக்கும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.