உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யு.யு.லலித் பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்றத்தின், அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த , எஸ்.ஏ.பாப்டே, ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி, என்.வி.ரமணாவின் பெயரை, அவர் பரிந்துரைத்திருந்தார். அது ஏற்கப்பட்டு, அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக, நீதிபதி, என்.வி. ரமணா கடந்தாண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் 26-ம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பியுள்ள தகவலில் உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். அதன்படி அடுத்த தலைமை நீதிபதியாக உதேய் உமேஷ் லலித்தை நியமிக்க என்.வி.ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இவரின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் வரும் 27ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அவர் பதவி ஏற்பார். யு.யு.லலித் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.