அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மீது சீனா பொருளாதார தடை!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, சீன அரசு அறிவித்து உள்ளது.

அண்டை நாடான சீனா, தைவான் நாட்டை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என அறிவித்து சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு தைவான் அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. சீனா – தைவான் விவகாரத்தில், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீன அரசு, தங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடமும் சீன அதிபர் ஷி ஜின்பிங் எதிர்ப்பைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே, அண்மையில், தைவான் நாட்டிற்கு, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, தைவான் நாட்டு அதிபரை அவர் சந்தித்துப் பேசினார். இதற்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரையும் நேரில் அழைத்து சீன அரசு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், சீனா – தைவான் விவகாரத்தில் தலையிட்டதாகக் கூறி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக, சீன அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவின் உள் விவகாரங்களில் நான்சி பெலோசி தேவையில்லாமல் அதிகமாக தலையிடுவதாகவும், சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிடுவதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது.