மர்மமான முறையில் உயிரிழந்த தைவான் பாதுகாப்பு அதிகாரி!

சீனா -தைவான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தைவான் நாட்டில் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தைவான் விவகாரம் நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தைவானைச் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் தைவான் தனி நாடு என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தைவானுக்கு தாங்கள் வழங்கும் ஆதரவைக் காட்டும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது தைவானுக்கு செல்வார்கள். இது வழக்கமான ஒரு நிகழ்வு தான். ஆனால், இந்த முறை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி நேரடியாகத் தைவான் சென்றது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தேவையில்லாமல் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் சாடியுள்ளது. இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சீனா- தைவான் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ளது.

இந்தச் சூழலில் தைவானின் முக்கிய ராணுவ தலைவர் ஒருவர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அவர் எப்படி உயிரிழந்தார், இதற்குப் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான ஓ யாங் லி-ஹ்சிங் என்பவர் தெற்கு தைவானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். இதனிடையே இன்று அதிகாலை அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

ஓ யாங் லி-ஹ்சிங் தைவான் பாதுகாப்புத் துறையில் முக்கியமானவர். அவர் தைவான் அரசின் தேசிய சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த முக்கியமான பதவியை ஏற்றுக்கொண்ட அவர், பல முக்கிய சோதனைகளை மேற்பார்வை செய்தவர். பாதுகாப்பு ஆய்வு தொடர்பான பணிக்காகவே அவர் தெற்கு தைவான் பகுதிக்குச் சென்று இருந்தார்.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் பயணத்திற்குப் பின்னர், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்புத் துறையில் தைவான் வளர்ச்சி அடையக் கூடாது என்பதற்காகச் சிலர் திட்டமிட்டு, முக்கிய அதிகாரியைக் கொலை செய்து இருக்கலாம் என்றும் சிலர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தைவான் பகுதியைச் சுற்றி சீன ராணுவங்கள் தொடர்ச்சியான போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தைவான் பகுதிக்கு மிக அருகே சீன விமானங்கள் பறக்கின்றன. சீன விமானங்களும் ஏவுகணைகளும் நேரடியாகத் தைவான் மீது பறந்ததாகச் சீனாவின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஆரம்பிக்கும் அபாயம் கூட உள்ளதாகச் சிலர் எச்சரிக்கின்றனர்.