உலக அமைதியை அழிப்பவர் நான்சி பெலோசி: வட கொரியா

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ‘உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர்’ என்று வட கொரியா குற்றம் சாட்டி உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய பயணம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, தைவான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு நான்சி அமெரிக்கா புறப்பட்டார். இதனிடையே, சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, அந்த பயணத்தை முடித்துக் கொண்டு தென் கொரியா சென்றார். அங்கு, தென் கொரியா – வட கொரியாவை பிரிக்கும் கொரிய தீபகற்பத்தின் எல்லைக்கு அவர் சென்றார். தென் கொரிய அதிகாரிகள், அமெரிக்க பிரதிநிதிகளுடன் வட – தென் கொரிய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு நான்சி பெலோசி சென்றார்.

இருநாட்டு எல்லைப் பகுதிக்கு நான்சி பெலோசி சென்றதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வடகொரிய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்சி பெலோசி உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மிக மோசமாக அழிப்பவர். தென் கொரியாவில் நான்சியின் நடவடிக்கைகள் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு வட கொரியா எதிர்ப்பு கொள்கையை கொண்டுள்ளதை காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.