மணிப்பூரில் வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அம்மாநில உள்துறை சிறப்புச் செயலாளர் எச் ஞானபிரகாஷ் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஷ்னுபூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், சனிக்கிழமை மாலை பூகாக்சாவ் இகாங்க் பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4 நபர்களால் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இந்த குற்றச்செயல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. வகுப்புவாத கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் (ஏடிஎஸ்யூஎம்), தேசிய நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூரில் ஆளும்கட்சியாக உள்ள பாஜக அரசு, தங்கள் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இதனையடுத்து, பிஷ்ணுபூர் மாவட்ட கலெக்டர், மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு 144தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.