எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்துவிடுகிறார்: மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பொய் மூட்டையை எடப்பாடி பழனிசாமி அவிழ்த்துவிட்டு இருப்பதாக கூறி, அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படவே இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கிவைக்கப்பட்ட திட்டத்தில் ஒரு கோடி இலக்கு என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 40 லட்சம் பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இருக்கிறார். நான் நேற்றைக்கு கூட (நேற்று முன்தினம்) மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை தந்து அந்த திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்றும், அதன் பயன்பாடு குறித்தும் தெளிவாக விளக்கினேன். இன்னொரு முறை அவர் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மக்களை தேடி மருத்துவத்தின் முழுமையான தகவலை தருகிறேன்.

முதல்-அமைச்சர் மக்களை தேடி மருத்துவம் எனும் உயிர்காக்கும் உன்னத திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளியில் 5.8.2021 அன்று தொடங்கி 23.2.2022 வரை 50 லட்சமாவது பயனாளி முதல் முறை சிகிச்சை முறை வகையிலே செங்கல்பட்டு மாவட்டம் சித்தலப்பாக்கத்தில் முதல்-அமைச்சரால் இத்திட்டம் சிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மயிட்டான்பட்டியில் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி 60 லட்சமாவது பயனாளி முதல் முறை சேவை என்ற வகையில் இந்த திட்டம் சிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், 21.6.2022 அன்று நாமக்கல் மாவட்டம் போதைமலையில் 4 கி.மீ. செங்குத்தான மலை உச்சிக்கும் நடந்தே சென்று 75 லட்சமாவது பயனாளிக்கு மக்களை தேடி மருத்துவம் மருந்து பெட்டகத்தை நான் தந்தேன். இந்த வகையில் 6.8.2022 அன்று சைதாப்பேட்டையில் மக்களை தேடி மருத்துவம் 2-ம் ஆண்டு இனிதே தொடங்கியது.
இந்த திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கியதில் நோய் ஆதரவு சிகிச்சை, பிசியோதெரபி சிகிச்சை, சிறுநீரகவியல் நோய் சிகிச்சை ஆகியவற்றில் சேவை வழங்கியதில் 6.8.2022 அன்று வரை முதல்முறை சேவையாக 83 லட்சத்து 45 ஆயிரத்து 992 பேரும், தொடர் சேவை 1 கோடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 872 பேரும் பயன் அடைந்துள்ளனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினிகிளினிக் எனும் திட்டம் பெயர் அளவில் பெயர் பலகை மட்டும் கொண்டே ஒரு சிறிய அறையில், பல இடங்களில் நடத்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்குரிய விளக்கத்தை நான் சட்டமன்றத்தில் விரிவாக எடுத்துரைத்தேன். சில இடங்களில் சுடுகாட்டை கூட மறித்து ஒரு சிறிய அறையில் அம்மா கிளினிக் உருவாக்கப்பட்டது என்பதை எதிர்க்கட்சி தலைவர் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.