தமிழகத்தில் பாஜக மாற்றத்தை கொண்டு வருகிறது: வானதி சீனிவாசன்

தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காரச்சேரியில் பாஜக சார்பில் பல்வேறு கட்சியிலிருந்து வந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த தொண்டர்களுக்கு சால்வை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட நாளுக்கு நாள் வேகமாக பாரதிய ஜனதா கட்சி ஒரு மாற்றத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய மத்திய அமைச்சர்களும் பாரத பிரதமர் மோடி அவர்களும் தமிழகத்திற்கு திட்டங்களை கொடுப்பதிலும் சரி, தமிழகத்தின் மீதான அக்கரையிலும் சரி, அவர்கள் தமிழகத்தை பொறுத்தவரை நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழை மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் கொடுப்பது, லேப்டாப் கொடுப்பது, இதையெல்லாம் இலவச கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியாது. அது அவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கு கொடுப்பது. ஆனால் இவற்றை தவிர்த்து தேர்தலுடைய வெற்றிக்காக கொடுக்கக்கூடிய கவர்ச்சி விளம்பரங்கள் எவை என்பதையும் மக்களுக்கு சொல்லி கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பாஜக மாற்றத்தை கொண்டு வருகிறது. மகளிருக்கு இலவச பஸ் பயணம் என்று மாநில அரசு அறிவித்தார்கள். ஆனால் அரசு என்ன செய்தது? ஒரு பக்கம் அந்த பஸ்களோட எண்ணிக்கையை குறைச்சாங்க. நானே சட்டப்பேரவையில் இதை சொன்னேன். இதை பயன்படுத்தி மற்றொன்றும் செய்துள்ளார்கள். இலவசமாக மகளிருக்காக இரண்டு சக்கர வாகனம் வழங்குகின்ற அதிமுகவின் திட்டத்தை நிறுத்தியது. ஒரு பெண்ணுக்கு உண்மையாகவே யாரையும் சார்ந்திராமல் அவர்களுடைய வேலையை செய்ய வேண்டுமென்றால் இருசக்கர வாகனம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். அவங்களுக்கு இலவச இருசக்கர திட்டம் ரொம்ப பயனுள்ளதா இருந்தது. அவங்க பணம் கொடுத்தார்கள், அரசு கொஞ்சம் பணம் கொடுத்தது வண்டி வாங்கி கொடுத்தாங்க. இது இளம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்தது. ஆனால் இலவச பஸ்சுக்காக பெண்கள் காத்து கிடக்கின்றனர்.

இப்ப என்ன பண்றாங்க பழைய பஸ்ஸையெல்லாம் பெயிண்ட் அடித்து கொண்டுவந்து புதுசா ஒரு திட்டத்தை தொடங்குறமாறி சொல்கிறார்கள். இந்த பிங்க் பஸ் மட்டுமல்ல. தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் எல்லா திட்டங்களையும் மாநில அரசு செயல்படுத்துவது போல் பெயர் வைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.