சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றைப் போன்று லாங்யா என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. கொரோனா அச்சம் காரணமாக, சுமார் 6 மாதங்களுக்கும் மேல், பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதையும் மறக்க முடியாது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உலகமே இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சீனாவில், “லாங்யா ” என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை இந்த வைரஸ் அதிகளவில் செயலிழக்க வைக்க செய்வதாகவும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனினும், லாங்யா வைரஸ் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. லாங்யா வைரஸ் தாக்குதலை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வேறு சில மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டு வருதவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.