போதை மருந்து விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக சைபர் செல் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது. குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னை:
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகிறது. போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க அதை மாணவ-மாணவிகளும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.
விழா இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெரும்பாலும் நான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற நேரத்தில் குறிப்பிட்டு சொல்வேன். மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன் என்று சொல்வது உண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அப்படி சொல்ல முடியவில்லை. ஏன் என்றால் ஒருவிதமான கவலையோடு கவலையளிக்க கூடிய மனநிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் நின்று கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்து பயன்பாடு, அதற்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது எனக்கு கவலையும், துக்கமும் அதிகமாகிறது. இதனை தடுக்க வேண்டுமானால் 2 விதமான முறைகளில நாம் சென்றாக வேண்டும். போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது. அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்வது. போதை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவதும் 2-வது வழி. முதல் வழி சட்டத்தின் வழி. இதை அரசும் குறிப்பாக காவல் துறையும் கவனிக்கும். 2-வது வழி என்பது விழிப்புணர்வு வழி பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் அத்தகைய விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும்.
சட்டத்தின் வழியாக அரசு செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடந்தது. காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 வரை நடந்தது. அதில் அறிவுரைகளும், ஆலோசனைகளும், கருத்துகளும் என்ன நிலைமை என்பது பற்றி அலசி ஆராய்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டங்களை தீட்டி இருக்கிறோம். எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டேன் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்து கொண்டால் நிச்சயமாக போதை நடமாட முடியாது என்று நான் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறேன்.
கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக நாம் தடுத்தாக வேண்டும் மலையடிவாரங்களை நாம் கண்காணிக்க வேண்டும். காவல் துறையின் ரோந்து அதிகரிக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதை பொருள் அதிகம் விற்பனையாக கூடிய இடங்களை நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு அருகில் போதை பொருள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். அரசு இது தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. சட்டங்களை திருத்துவதற்கும் முடிவெடுத்துள்ளது. சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இருக்கிறோம். போதை மருந்து விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக சைபர் செல் உருவாக்கப்பட்டுள்ளது. போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக ஒரு இன்டலிஜென்ட் செல் ஏற்படுத்த உள்ளோம். இதற்கான உறுதியை மாவட்ட கலெக்டர்களும், காவல் துறை கண்காணிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். இவை அனைத்தும் அரசாங்கத்தின் கடமைகள்.
இந்த நடவடிக்கைகளில் நான் சர்வாதிகாரி போல செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன் என்று அதிகாரிகள் கூட்டத்தில் உறுதி அளித்து உள்ளேன். இவற்றை நாங்களும், அரசு அதிகாரிகளும், காவல் துறையும் பார்த்துக் கொள்வோம். சட்டம் தன் கடமையை செய்யும். சட்டம் அதன் கடமையை உறுதியாக செய்யும். அப்படி அந்த கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கடுமையாக கூற விரும்புகிறேன். இப்போது தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது. குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு முறையாக தண்டனையும் வாங்கிக் கொடுத்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். இதையொட்டி போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக காவல் துறையில் இயங்கி வரும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இரண்டையும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் இன்று முதல் அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுத்துறை (சி.ஐ.டி.) என்று அறிவிப்பு வெளியிட்டார். சென்னையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழி போல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.