வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம்!

இந்நிலையில் வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம் என்று கிம் ஜாங் உன்னின் சகோதரி கூறியுள்ளார்.

உலகை அச்சுறுத்திய கொரோனா, வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வடகொரியாவில் கொரோனா நோயினை அங்குள்ள சுகாதாரத்துறையினர், சாதாரண காய்ச்சல் என்றே பதிவு செய்தனர். இதனால் இங்கு கொரோனா இறப்பு குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் இங்கு ஒமைக்ரான் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தலைநகர் பியோங்யாங்கில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த வடகொரியாவின் சுகாதாரத்துறையினர், நோய் தடுப்பு விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டனர். இதில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம். இதற்கு காரணமானவர்களை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் சுகாதார பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார்.

இந்நிலையில் வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன்னின் சகோதரியான யோ ஜாங், தங்கள் நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க தென்கொரியாவே காரணம் என்று கூறியுள்ளார். தென்கொரிய எல்லையிலிருந்து வடகொரிய மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, பலூன்கள் மற்றும் காகிதங்கள் மூலம் எல்லை தாண்டி வீசப்படும் அல்லது பறக்கவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த செயலுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்ணாக கருதப்படும் யோ ஜாங், தென்கொரியாவின் இத்தகைய செயல்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றமாகும் என்று தெரிவித்தார். தொற்று பாதித்த நபர்கள் மூலம் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மூலம் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது என உலக சுகாதார அமைப்பும் பல நாடுகளும் தெரிவித்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தென்கொரியாவிலிருந்து அனுப்பப்படும் பலூன் போன்ற பொருட்களின் மூலம் தங்கள் எல்லைக்குள் கொரோனா பரவுகிறது என்றார். இன்னும் இத்தகைய பலூன்கள் பறந்தால் வடகொரியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், கொரோனா வைரசை ஒழித்துக்கட்டியது போல தென்கொரிய அதிகரிகளையும் கையாள்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.